ஜோதி விமர்சனம்
எழுத்தாளர் : பாரதிப்பிரியன்
நூலின் பெயர் : சங்கத் தமிழ்ப் பாண்டியன்
வெளியீடு : விதைகள் பதிப்பகம்
முகநூல் லிங் : முகநூல் லிங்
முதலில் இப்படி ஒரு கதைக்களத்தை எழுத வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக எண்ணற்ற தகவல்களை திரட்டிய எழுத்தாளர் பாரதிப்பிரியனுக்கு என்னுடைய மனம் நிறை பாராட்டுகள். தென்குமரி தேசம் கடற்கோளால் அழிந்து போனதை ரொம்ப ரொம்ப அழகாக வடிவமைத்து காட்டி உள்ளார். எனது தேசம் எனும் எண்ணத்தில் முந்தைய நாட்களில் நடந்த நிகழ்வை தெரிந்து கொள்ள எண்ணி வாசிப்பை தொடங்கினேன். அதன் மூலம் பல திடுக்கிடும் தகவல்களையும் தெரிந்து கொண்டேன். மிடாலம், குறும்பனை, கருங்கல், முக்கூடல், காவல் கிணறு, மகேந்திரகிரி என்று என்னுடைய ஊரை சுற்றியுள்ள பகுதியில் நடந்த சம்பவங்களை அறிந்து வியப்பிற்கு உள்ளானேன்.
ஒரு கிராமமே சுனாமியால் அழிந்து போயிருக்கிறது என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோமோ தவிர, கடல் மற்றும் வானத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள், அதனால் ஏற்படும் பாதிப்பு, அப்போது உள்ளவர்கள் தெரிந்து கொண்டால் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க முனைவார்கள், அன்றைய மன்னராட்சி எப்படி எல்லாம் நடந்துள்ளது, மன்னன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்று எல்லாம் ஒவ்வொன்றையும் தத்ரூபமாக எடுத்துக்காட்டி உள்ளர் நம் எழுத்தாளர்.
ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை. அடுத்து என்ன வரப்போகிறது எனும் ஆவல், புத்தகத்தை கீழே வைக்க விட மறுக்கிறது. வர்ணனை காட்சிகளும், கதையோட்டமும், கதை நகர்வுகளும், அப்படியே நம்மை கதையினூடு கட்டிப் போடுகிறது. இனி மீத விசயங்கள் விமர்சனத்தில் ..
முடத்திருமாறன்:
ஆரம்பமே கொந்தளிக்கும் அலைகடலில் பயணிக்கும் நாயகனும், அவரது மனைவியும் கொற்கையில் உள்ள அவனது தாய்மாமன் வீட்டிற்கு போவது போலவும், அங்கு சென்று அவர்களிடம் தென்குமரி தேசமே கடற்கோளால் பாதிக்கப்பட்டு சமுத்திரத்தில் மூழ்கி விட்டது. நாட்டு மக்கள் பேரரசர் அனைத்தையும் இழந்து விட்டோம் என்று, கண்ணீர் கடலில் தத்தளிப்பது போலவும் ஆரம்பமாகிறது.
அதிர்ச்சியுடன் நடந்த விபரங்களை கேட்க, அவனும் முந்தைய நிகழ்வுகளை அப்படியே எடுத்துரைப்பதுடன், நிகழ்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளையும், சதிகள், பிரச்சனைகள், போர் என்று பல விறுவிறுப்பான சம்பவங்களை எழுத்தாளர் தன்னுடைய பாணியில் திறம்பட கையாண்டிருக்கிறார்.
தென்குமரி தேசத்தின் பேரரசு பவித்திர பாண்டியனின் வாரிசு. தகப்பனின் கோபத்தில் ஆளாகி நாட்டை விட்டு ஆறுவருடங்கள் வெளியே செல்லுமாறு தண்டிக்கப்படுபவன். அவன் கற்ற சங்கத்தமிழை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறான். எதனால் மகனுக்கு இப்படி ஒரு தண்டனையை அரசர் கொடுக்கிறார் என்ற சந்தேகம் எழுகிறது. அதற்கு காரணம். மகனுக்கு தெரியாமல் பெற்றோர் எடுத்த முடிவும், அவனுக்காக பார்த்து வைத்த பெண்ணும் ... அவளது திமிர், அடாவடி பிடிக்காமல் திருமணம் செய்ய மறுக்க, அவளோ அகந்தை, திமிர், அடாவடியில் அவனையும், அவனது நாட்டையும் அழிக்க சதித்திட்டம் தீட்டுகிறாள். அவள் மட்டுமல்ல சதிராணி எனும் பெயரில் வரும் வேறு ஒரு பெண்ணும் பேரரசுக்கு எதிராக செயல்பட்டு அவரது பெயர், நாட்டிற்கு களங்கத்தை விளைவிக்க முயல்கிறார்கள். நாட்டை விட்டு வெளியேறிய இளவரசன், எங்கனம் அவர்களிடம் இருந்து நாட்டையும், பேரரசையும் காப்பாற்றுகிறான்? தண்டனை பெற்றவர்கள் திருந்துகிறார்களா? அல்லது மறுபடியும் சதியை முன்னெடுக்கிறார்களா என்பதே கதை...
***
நாட்டை விட்டு வெளியேறிய இளவரசன் ஒவ்வொரு இடங்களுக்கும் பயணித்து அங்கு செய்கின்ற நற்காரியங்கள்👌👌👌 ரொம்ப நன்றாக இருந்தது. குறிப்பாக சாம்பிராணி காட்டு பிரச்சனை, யாளியை அடக்கி சிம்ம கொம்பனாக மாற்றும் இடம், முத்தூர் வணிகர்களின் திட்டத்தை முறியடிப்பது, சீனன் லியூ ஜி காட்சிகள், தங்கமலையில் வருடக்கணக்காக பணிபுரியும் அடிமைகள் பேச்சுக்கு அவனது பதில்கள், போர் வியூகங்கள் அனைத்தும் வெகுசிறப்பு...
கருங்கல் போராட்டம், தங்கசுரங்கத்தில் நடக்கும் சண்டை, கைதிகளை உயிரோடு எரிப்பது, அரசன் என்று பாராமல் கைது செய்வது, தூங்கு தண்டனை கொடுக்க முடிவெடுப்பது, மூன்று சிற்றரசை கட்டி வைத்து கொளுத்த முயலும் இடம், பேரரசர் மீதே பெண்ணை வைத்து தவறாக நடந்ததாக பழி போடுவது, ... இன்னும் பல இடங்களில் வருகின்ற நிகழ்வுகள் எல்லாமே எதிரிகளின் வெறித்தனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.
சதிராணி யார் என்று அறிந்து கொள்ள இளவரசன் மேற்கொள்ளும் முயற்சிகளும், அவளிடமிருந்து விழுகின்ற சூடான கேள்விக்கு அரசரின் தலை கவிழ்ந்த தோற்றமும், சிற்றன்னையின் எதிர்வாதமும்👌👌👌
சிற்றன்னையின் தவறான வடிகாட்டுதலால் சிதறி, தலைக்கனம் பிடித்து வாழும் கண்ணுக்கினியாள், மனித பிறவியே அல்ல! இளவரசனை அடைய வேண்டி அவள் எடுக்கும் முயற்சியும், காதல் வேடமிட்டு அரசனையே சாய்ப்பதும், அனைவரையும் கொன்று குவித்தேனும் அவர்களின் ரத்தத்தின் மீது நடந்து அரசியாக முயல்வதும், இளவரசியை வார்த்தையால் வதைத்து அனைவருக்கும் தண்டனை கொடுக்கும் இடமும் கொடுமையின் உச்சம்!!
இளவரசின் இணை அருமையான தேர்வு. அவர்களின் ஊடலும் கூடலும் ரசனையாக இருக்கிறது. உமையாள், சிம்ம கொம்பன்👌👌👌
அருண்மொழி வர்மனை பற்றி கட்டாயம் சொல்லியாக வேண்டும். வானில் நடக்கும் மாறுதல்களையும், ஆமையின் மீதேறி கடலுக்குள் சென்று நடக்கப் போவதை கண்டறிய முயல்வதும், தான் உண்மையை உரைத்தும் ஏற்க மறுத்தவர் முன் ஆவேசமாக பேசிய இடமும் அட்டகாசமாக இருந்தது.
கடற்கோளால் நகரமும், நாட்டு மக்களும் அழிந்து போவதை படித்து அழுது விட்டேன். இறுதி காட்சி செம விறுவிறுப்பு. பிரமாதமாக இருந்தது.
ஒவ்வொரு காட்சியும் ரொம்ப ரொம்ப நன்றாகவும், அருமையாகவும் இருக்கிறது. கதையும் பெரியது... அதனால் விமர்சனமும் பெரியதாகி விட்டது. கட்டாயம் எல்லோரும் வாசிக்கும் விதமாக தரமான முறையில் அச்சிடப்பட்டு உள்ளது.
தேசிய விருது பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் ஒருங்கே பெற்றுள்ளது. மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல வாங்கவும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐
Comments
Post a Comment