#ஜோதிரிவ்யூ
எழுத்தாளர் : பாரதிப்பிரியன்
படைப்பு : யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்)
இதுவொரு வரலாற்று நாவல். அதனால் ஆசையுடன் படிக்க துவங்கிவிட்டேன்.
ஒவ்வொரு காட்சிகளும், நகர்வுகளும், வாக்கிய உச்சரிப்புகளும், வருணனைகளும், கதாப்பாத்திரத்தின் பெயர்களும், போர் முறை, வியூகம், சதி வேலைகள் ஏமாற்று அப்பப்பா! இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் எழுத்தாளரின் திறமையை. இந்நாவல் வாசிப்பின் மூலம், நிறைய தகவல்கள், சாம்ராஜ்ஜியங்கள், மன்னரின் வாழ்க்கை, பேராசை பட்டு துயர் உறுபவர்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன்.
அதற்கும், இக்கதையை எவ்வித பிசிறின்றி வடிவமைத்தமைக்கும் மனமார்ந்த பாராட்டுகள்👏👏👏
யாழினி :
பல்லவ படை வீரன் கந்தமாறன் தலைமையில் நடைபெற்ற போரில், தோல்வியை தழுவிய களப்பிரார்கள் சேர தேசத்திற்குள் புகுந்து அங்கு பெரும் சேதத்தை உருவாக்கியதுடன், அரசர், ராணி, அவரது மூன்று வாரிசுகளை கொன்றுவிடுகிறார்கள். அத்துடன் அங்கேயே தங்கி அதிகாரத்தை நிலைநாட்டுகிறார்கள்.
சேரத்தை ஆள வேண்டும் என்ற ஆசையில் களப்பிரார்களின் அரசனின் மனதில் ஆசையை வளர்த்து, பல பெண்களின் வாழ்க்கையை அழித்து, தன்னுடைய சுயநலத்திற்கு வித்திடுகிறான் சேர மன்னனின் படைத் தலைவன். பாண்டியன், சாளுக்கியன், களப்பிரார், சுந்தரவள்ளி, பார்த்திபன் என்று ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக பேசி ஏமாற்றும் இடத்தில் படு கில்லாடி என்றே எண்ண வைக்கிறான்.
மனைவியின் மீது உண்மையான அன்பை வைத்து, வாரிசில்லா வருத்தத்தையும் மறந்து பண்புடன் நடந்து கொள்ளும், பாண்டிய மன்னனின் மனதில் விசத்தை தேய்த்து அவரது உதவியை நாடுகிறான். 'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்' என்பதற்கு ஏற்ப, அவனுக்கும் பெண்ணாசையுடன் மண்ணாசையும் பற்றிக் கொள்ள அவனுக்கு உதவுவதாக வாக்களிக்கிறான்.
மற்றொரு புறம் சாளுக்கிய தேசத்தை ஆண்ட புலிகேலி, பல்லவ படையை தோற்கடிக்க முயல்கிறான்.
கந்தமாறன் போர் வியூக திட்டத்தில் சேர நாடு களப்பிரார்கள் வசமானதால், அவர்களை ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறான்.
இறந்து போய்விட்டதாக கூறப்படுகின்ற சேர மன்னனின் வாரிசு உயிரோடு வந்து, தன் நாட்டை சீரழித்தவர்களை எப்படி பழியெடுக்கிறாள்? அவளுக்கு உதவி புரிவது யார்? யாழினி மீதான ஆசையில் இருக்கும் பாண்டிய மன்னனின் கனவு நிறைவேறுகிறதா? களப்பிரார்கள் களையெடுக்கப்பட்டார்களா? ஒவ்வொருவரிடமும் நல்லவன் போல வேடம் பூண்டு ஏமாற்றும் விஜயன் திட்டம் நிறைவேறுகிறதா? என்பதை ரொம்ப ரொம்ப அட்டகாசமாக சொல்லியிருக்காங்க.
புத்தகத்தை திறந்தால் முடித்து விட்டு வேறு வேலை பார்க்கும் விதமாகவே இருக்கிறது. விறுவிறுப்பும், சுவராஸ்யமும் கலந்து ரெம்ப நன்றாக இருக்கு.
கந்தமாறனின் பார்வையும், வியூக திட்டங்களும், ஒற்றனை கண்டறிந்து பதிலடி கொடுக்கும் இடமும், பிடித்து வைக்கப்பட்டிருந்த களப்பிரார்களிடமிருந்து உண்மையை கண்டறியும் விதமும், புறா விடு தூதும் அருமை👌👌👌
பார்த்திபன் என்னைக் கொஞ்சம் குழப்பி விட்டுட்டான். அரச குமாரியின் மீது மிகுந்த பற்றுதலுடன் காணப்பட்டு, அவளது கோரிக்கையை சிரமேற்று செய்து கொடுக்க செல்கிறான். திடீரென்று பார்த்தால் எதிரியின் உறவினாக வருகிறான். அதிலும் நாயகி மீது கோபம், சேர தேசத்தின் மீதும் ஆசை. அடடடா!! இதென்ன இப்படி என பக்கென்று ஆகிவிட்டது.
களப்பிரார்களின் தலைவன் கதாபாத்திரம் வெறி பிடித்த மிருகம். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரிந்து கொள்ளாத அளவிற்கு, போதையும், பெண்களும் மயக்கி வைத்திருக்கிறது. பாவம்டா உன்னால் பாதிக்கப்பட்ட பெண்கள். பதறிற்று வாசிக்கையில் …
சிம்மவேணி கதாபாத்திரம் ஆளுமை நிறைந்தது. அடேங்கப்பா பயப்பட வச்சுட்டியேம்மா. பூவிழியின் காதலும் ஊடலும்👌👌👌👌 நந்தினி மோசம்.
யாழினியும், சிம்ம வேணியும் களப்பிரார்களுடன் உகுநீர்கல் கரையில் நடத்திய சண்டைக்காட்சி ரொம்ப நன்றாக இருந்தது. இறுதி அத்தியாயத்திலும் இரு பெண்களும் அத்தனை பலம் பெற்றவராக போரிட்ட இடம் மலைக்க செய்து விட்டன.
கமலக் கவியடிகள் பேச்சும், நடத்தையும் நன்றாக இருந்தது. ஆனால் நீவிரா இப்படி? என்று வியப்பாகவும் போயிற்று.
பாண்டிய மன்னா… உனக்கு இதெல்லாம் தேவைதானா?
சொல்ல சொல்ல நிறைய இருக்கு. ஆனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். வாசிக்க விருப்பமிருப்பவர் புத்தகத்தை வாங்கி படியுங்கள்.
மேலும் பல படைப்புகளை அட்டகாசமாக வழங்கவும், விருதுகள் பல பெற்றிடவும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள்💐💐💐💐
Comments
Post a Comment