Skip to main content

சங்ககால இலக்கியங்கள் கூறும் ஆடல் வடிவங்கள் :

 


சங்ககால இலக்கியங்கள் கூறும் ஆடல் வடிவங்கள்:


சங்ககாலம் தமிழர் பண்பாட்டுக் காலமாகத் திகழ்ந்தும் அகத்திணைஇ புறத்திணை என இரு திணைகளாகக் காணப்பட்டது. அகம்இபுறம் எனும் ஒழுக்கங்கள் காதலையும் வீரத்தையும் முன் நோக்கி திணைகளாக வகுக்கப்பட்டன. புகழுக்காக வீரத்தையும் இன்பத்துக்காக காதலையும் கொண்ட மக்களது வாழ்வியலைக் கண்ட புலவன் இதனை பாராட்டும்முகமாக எட்டுத் தொகைஇ பத்துப்பாட்டு எனும் இலக்கியவடிவங்களை முதல்இ கருஇ ஊரிஇ இயற்கைப் பொருட்கள் என்பவற்றை பாடுபொருளாக வைத்து இக் காலத்து இலக்கியங்களாகத் தொகுத்தனர். இது முற்றுமுழுதாகமக்களது வாழ்வியல் அரசியல்இசமுதாயத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றது. இவ் இலக்கியங்களில் நடனம் பற்றியபலசெய்திகளைஅறிந்துகொள்ளலாம்.


மேலும் நடனம் ஆடிய நங்கைகளை விறலியர்இபொருனர் எனஅழைத்தனர். இவர்கள் தனிநடனம் (அரசர் முன் நடனம்) குழு நடனம் (மக்கள் முன்னிலையில்) போன்ற நடனங்களை செய்தனர். இதுபிற்காலத்தில் குரவை கூத்துஇ துணங்கை கூத்துஇ வேலன் வெறியாடல் எனவும் எழுச்சி பெற்றது. நடன மங்கையர்கள் தங்களுக்கு கிடைக்கப் பெற்ற பொருட்களை ஆபரணங்களாகவும் இடங்களை அரங்கங்களாகவும் அமைத்துக் கொண்டனர். இக்காலத்தில் எழுச்சி பெற்ற இக் கலையே பின் உள்ள காலத்தில் பரதமாக தோன்றுவதற்கு ஒர் ஊன்று கோலாக சங்ககாலம் திகழ்ந்தது. இச் செய்திகளை ஆராய்ந்து எடுத்துக் கூறுவதாக இவ் ஆய்வுக்கட்டுரை அமைகின்றது.


திறவுச்சொற்கள்


சஞ்சாரி பாவம், வாழ்வியல், மானிடவியல், அகத்திணை, புறத்திணை, மனித உணர்வுகள், ஸ்தாயிபாவம், அனுபாவம், குரவை அயர்தல், குரவை தூங்குதல், குரவை தழுவுதல்


முன்னுரை


சங்ககாலம் எனக்கொள்ளப்படுகின்ற காலப்பகுதி தமிழ் நாட்டு வரலாற்றில் “முந்து வரலாற்றக் காலம்” என்று கூறப்படுகின்றது. சங்க காலப்பகுதியாகக் கி.பி. முதலாம் நூற்றாண்டு தொடக்கம் மூன்றாம் நூற்றாண்டு வரையான காலப்பகுதி என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இந்தக் காலத்துக்குரிய நூல்களாகத் தொல்காப்பியம், எட்டுத்தொகை,பத்துப்பாட்டு என்பன விளங்குகின்றன. இவற்றில் எட்டுத்தொகையில் நற்றிணை,குறுந்தொகை, அகநாநூறு, புறநாநூறு,பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, பரிபாடல், கலித்தொகை என்னும் எட்டு நூல்களும் பத்துப்பாட்டில் திருமுகாற்றுப்படை, பொருணராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி, நெடுநெல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் எனும் பத்து நூல்களும் அடங்குகின்றன. சங்ககால மக்களின் வாழ்க்கை முறைமைகள் அக்கால புவியியல் அமைப்புக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டு அமைந்திருந்தன. நில வேறுபாட்டுக்கு ஏற்ப ஐந்து பிரிவாக மக்கள் வாழ்ந்து வந்தாலும், அவர்களின் வாழ்க்கை முறைகள் பொதுவாக அகம், புறம் என்ற இரண்டினூடாக விளக்கப்படுகின்றன. இங்கு அகம் என்பது ஆண், பெண் காதல் உணர்ச்சியைக் களவு, கற்ப என்கிற இரு நிலைகளில் விவரித்துக் கூறுவதுடன், புறம் என்பது வீரதீரச் செயல்கள் அறம், தொழில் போன்றவற்றின் இயல்புகளை விளக்கிக் கூறுகின்றது.


இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடிகள் என்று கூறுவதற்கு இணங்க, சங்ககால மக்கள் அமைப்பு மன்னர் ஆட்சி, இயற்கை, புவியியல் மாற்றங்கள் என்பனவற்றை அந்தக் காலத்தின் இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. எனினும் சங்ககால மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் இலக்கியங்களில் உள்ளது போன்றே அமைந்தது என்பதை உறுதியாகக் கூறமுடியாது. ஏனெனில் புலவர்கள் பெரும்பாலும் தமது மனதிற்பட்டதை கற்பனையில் பாடியிருக்கக்கூடும்.ஆடற்கலையினுடைய ஆரம்பம் பற்றிய ஆய்வானது சமூக மானிடவியல் ரீதியாக மேற்கொள்ளப்படுவதால் மக்கள் வாழ்வியலுடனான கலை வெளிப்பாடுகளை அறிந்துகொள்ள முடிகிறது. அந்த வகையில் ஆடற்கலை பற்றிய தேடலைச் சங்ககால சமூக மானிடவியல் முறைகளில் இருந்து மேற்கொள்வது சிறந்தது. எனினும், இக்காலத்து இலக்கியங்கள் ஆடல் சார்ந்த விளக்கங்களைக் கொண்டுள்ளதைக் காணலாம்.


சங்ககால மக்களின் வாழ்க்கை மன்னர் ஆட்சியின் கீழானது. வேட்டையாடல், விவசாயம், மீன்பிடி, தேன் இறக்கல் என்ற தொழில்களை முக்கிய தொழில்களாகக் கொண்டிருந்தனர். இதன்போது நிகழும் அகம், புறம் சார்ந்த செயற்பாடுகள் மூலமாக மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்த செய்திகளைக் காண்கின்றோம். ஐந்திணை, மக்களினதும் அகத்தினை வாழ்க்கைப் பண்புகளில் காதல் பேசும் விதமாக ஆடல், இசை, வாத்தியஇசை அதிகம் பயன்படுத்தப்பட்டதையும் புறத்தினை, வாழ்க்கைப் பண்புகளில் வீரத்தின் எழுச்சியின் பொருட்டு ஆடல் நெறி புனைந்திருந்தமையையும் அறிகின்றோம்.அனேகமாக சங்க காலத்து போர் மரபை ஒட்டியதாகத் துணங்கைக் கூத்து, குரவைக்கூத்து, களவேள்வி, வாடாவள்ளிக் கூத்து மற்றும் காதல் நோயால் மேற்கொள்ளப்பட்ட வெறியாடல் என்பன இந்தக் கால மக்களின் வாழ்வியலுடன் இணைந்திருந்த கூத்து வகைகள் ஆகின்றன.


சங்க இலக்கியங்களின் பாடுபொருள்கள் தனித்தன்மை வாய்ந்தவை. சங்க காலத்தில் தனி மனித உணர்வுகளே பெரிதும் பேசப்பட்டன. அதனால் சங்க இலக்கியங்களில் தனிமனித உணர்வுகளை நிலத்தின் அடிப்படையில் பகுத்தனர். நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பகுத்து இவ் ஐந்து நிலத்திற்கும் முதல், கரு, உரி எனும் மூன்று பொருள்களைப் படைத்தனர். இம் மூன்றில் உரிப்பொருள் என்பது உணர்ச்சி அல்லது நிலைக் கருத்து என்னும் ஸ்தாயி பாவத்தைக் கூறும். கருப்பொருள் என்பது துணைக்கருவியாக நின்று உணர்ச்சியின் பல்வேறு நிலைகளை விளக்கும் சஞ்சாரி பாவத்தைக் கூறும். முதல் பொருள் சஞ்சாரி பாவத்திற்குத் துணை செய்யும் அனுபாவமாக இயங்கும். இங்கு உரிப்பொருள் என்பது நிலம்சார் உணர்ச்சி. முதல் பொருள் என்பது நிலங்களின் இயற்கைத்தன்மை, நிலங்களுக்குரிய பருவம், நேரம் என்பனவாகும்.


மேலே சொல்லப்பட்ட பொருள்களில் கருப்பொருள் பதினான்கு வகையான பொருள்களை உள்ளடக்கியது. அவை நிலத்திற்கு உரித்தான தெய்வம், உயர் குடிமக்கள், உழைக்கும் மக்கள், வாழிடம், உணவு, தொழில், மலர், மரம், நீர், பறவை, விலங்கு, பண், யாழ், பறை என்பனவாகும். முன்பு கூறியது போன்று இப்பொருள்கள் பதினான்கும் சஞ்சாரி பாவத்திற்குத் துணையாய் அமையும்.கருப்பொருளில் உள்ள பண், யாழ், பறை என்பன ஒவ்வொரு நிலத்திற்கும் ஏற்றாற்போல் இசையும், தாளமும் அமையும். எனவே உடல் இயக்கமாகிய நடனமும் தனித்தனியாய் அமையும்.சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்களுக்குரிய இருப்பிடங்களில் குழுவாக கூட்டாக வாழ்ந்தவர்கள். எனவே அவர்களின் நடனமும் குழு நடனமாகத்தான் அமையும். மன்னர்களைக் காணச்செல்லும் விறலியோ கூத்தரோ தனி நடனம் செய்வார்கள். ஆனால் அகப்பொருள் மரபின் கீழ் பயின்றுவரும் பாடல்களில் குழு நடனங்களையே பார்க்க முடிகின்றது.


 


சங்க இலக்கியங்களில் காணப்படும் நடனம் குரவை, துணங்கை, வேலன் வெறியாடல் எனும் மூன்று பகுதியாகவே இருக்கும். அந்தவகையில் குரவைக் கூத்துப் பற்றி நோக்குகையில் தமிழ் இலக்கியங்களில் அதிகமாக பேசப்படும் ஆடல் வடிவம் குரவைக்கூத்தாகும். இக் குரவைக்கூத்தை இலக்கியங்கள் “குரவை அயர்தல்”“குரவை தூங்குதல்”“குரவை தழுவுதல்” எனப்பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. அதிகமாக மலைப்பிரதேசங்களில் வாழும் குரவை குடியினர் ஆடுவதால் “மலை நடனம்” என்றும் கூறுவர். இக்கூத்து குரவை ஒலி என்கிற ஓசையுடன் தொடர்புபட்டதாகவும் பொதுவாக திணைப்புலம் காத்தலின் போது பறவைகளை விரட்டுவதற்காக ஒலி எழுப்பப்பட்டதாகவும் அதனுடனேயே இக்குரவை கூத்து தொடர்புபட்டதாகவும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. குரவை என்பது “குரல்” என்ற சொல்லில் இருந்து பிறந்தாக காணப்படுகின்றது. இங்கு குரல் என்பது சொல், தொண்டை, மூச்சுக்குழல் என்ற பொருளால் வரும் என்றும் இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனினும் சங்க இலக்கியத்தில் இவ் ஒலிப்பண்பை விட ஆடல் பண்பே முக்கியமாக விளங்குகின்றது” சமுதாய நலன் கருதி அனைத்து பிரிவினரும் பங்கேற்கும் இவ்வகை ஆடலில் மனித நேயமும் மேலோங்கி நிற்பதுதனிச்சிறப்புப் பெற்றுக்கொண்ட வெற்றியைக் கொண்டாடுவதற்கும் உருவான ஆடல் என தொல்காப்பியம் கூறுகிறது.


பஞ்சமரபு,அகத்தியர் கூத்தியல் போன்ற நூல்களில் இக்கூத்து பற்றிய குறிப்புக்கள் காணப்படுவதாக அறியப்படுகிறது. சங்ககால கலை இலக்கியங்கள் கூறுவதில் இருந்து இக்குரவைக் கூத்தானது மிகவும் ஆரவாரம் மிக்கதாகவும் பக்கவாத்தியங்களுடன் ஆடப்படுவது என்றும் ஏழு அல்லது ஒன்பது பேர் சேர்ந்து ஆடும் ஆடல் என்றும் அறியலாம். பொதுவாக குரவைக் கூத்து ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு ஆடுவதும் ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஆடுவதும், கள் உண்டு வெறியில் ஆடுவதும் என்ற பல விதங்களில் இலக்கியங்கள் கூறுவதைக் காணலாம். இவர்கள் கள் உண்டு ஆடும்போது வரையறையற்ற ஒரு ஆடலாகவும் ஏனைய பொழுதுபோக்குகளில் ஆடப்படும்போது வரைமுறையுடன் ஆடப்பட்டும் இருக்கிறது. சங்ககாலத்தில் குரவை ஆடல்கள் போர் ஆடல்களாக புகழ் பெற்றிருந்தன. உதாரணமாக முன்தேர் குரவை, பின்தேர்க் குரவை என்ற தொல்காப்பியம் ஏனைய புறத்திணை நூல்களில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். போர்க்கால குரவை ஆடல்கள் பறை மற்றும் முரசு போன்ற வாத்தியங்களுக்கு ஆடப்பட்டதையும் காணலாம்.


குரவை ஆடும்போது ஓருவர் பாடி முடிக்க மற்றவர் அதனைத் தொடர்ந்து பாடும் தன்மை என்பது,


குரவை தழி இயா மாடக் குரவையும்


கொண்டு நிலை பாடிக் காண” (கலி 39:26:29)


என்று கலித்தொகை அடிகள் விளக்குகின்றது. குரவையில் செய்யுள் எனும் அம்சம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.


“தண்ணுமை பாணி தளராது எழு உக


பண்ணமை இன்சீர் குரவையுள் தென் கணணித்


தின்தோள் திரள் ஒளி ஆய்ந்த முருகரால்


பெண்தோள் பாராட்டி”


என்னும் கலித்தொகை பாடல் சங்ககாலத்து ஆயர்கள் குரவை ஆடிய செய்தியை கூறுகிறது. அதுமட்டுமன்றி,


“குரவை தழ்கி யாம் மாஉழிப்பாடி


தோயா விரும்புகம் தெய்வம் பரவுதும்


எமக்கோ வாழியச் இம்மலர் தலை உலகே”


என்று பாண்டிய மன்னனைப்பாராட்டி குரவை ஆடி இறுதியில் திருமாலை வழிபட்ட செய்தியை சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.


“அன்புரு காதலார் கைப்பினைந்து ஆய்ச்சியர்


இன்புற்று அயவர் தழு வளு” (கலி 106)


என்பது ஆண் பெண் இருபாலாரும் கைகோர்த்து தழுவி ஆடிய குரவைக் கூத்து பற்றிய செய்தியாக விளங்குகிறது. இங்கு “அயர்வர்” என்பது ஆடலின் உச்ச நிலையைக் குறித்து இதனையே “குரவை அயரும்” (பதிற்-73 ஆகம் 336) “தழுவணி அயர்த்தும்” (குநற் 394) “அயரும் குரவை” (மலைப. கடா 352) என்பவை குறிக்கின்றது. இது உணர்வை இழத்தல், உணர்வை மறத்தல் களைப்படைதல் என்பதை குறிப்பதாகும். இக் குரவை என்ற சொல்லில் கூறப்பட்ட ஆடலை சங்க இலக்கியங்கள் “போர் வீரனின் போர்கள ஆடல்” என்றும் (புற 24) கள் உண்ட குரவனின் குரவை என்றும் (புற 129) நெய்தல் மகளிர் குரவை (அகம் 20) என்றும் தைநீர் ஆடலில் குரவை (கலி 104) என்றும் (தொல்புற 21) பல இடங்களில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.


“துணங்கை ஆடிய வலம் படு கோமான்


கோன்று தோள் ஒச்சிய வென்நாடு துணங்கை”


என்பதால் போர்த்துணங்கை பற்றிய செய்தியைக் காணலாம். போர்க்காலத்தில் வெற்றியைத் தந்த கொற்றவைக்கு பிணங்களைப் பரிசாகக் கொடுத்த அரசனுக்கும் நன்றி செலுத்துவதற்காக கள வேள்வியின் நிறைவாக துணங்கைக் கூத்து போர் வீரர்களால் ஆடப்படுவதாக கூறப்படுகிறது. இங்கு கூறப்படும் “தோள் ஒச்சிய” மடங்கிய இரு கைகளாலும் கூத்து ஆடுதலை ஒத்தது. இத்துணங்கை கூத்தின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக விளங்கியது. உ.வே. சாமிநாதையர் தன்னுடைய அடிக்குறிப்பில் இக் கூத்தினை “கிங்கக் கூத்து” எனக் குறிப்பிடுகின்றார். இது கேளரத்தில் குறத்தி ஆட்டத்தையும், தமிழில் சிங்கன் சிங்கி எனப்படும் குறவன் குறத்தி ஆட்டத்தையும் ஒத்ததாகவிருக்கும். துணங்கை என்பது “துலங்கு” என்பதன் அடியாகப் பிறந்தது என்றும் குலுக்குதல், கலக்குதல், தொங்குதல், தூங்குதல், அசைதல் என நேரடிப் பொருளைத் தருவன என்றும் பேராசியரியர் சிவத்தம்பி குறிப்பிடுகின்றார். இது ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு அசைதல் என்பதையும் குறிக்கின்றது.


“கலி கெழு துணக்கை ஆடிய மருங்கில்


வளைதலை முதா ஆம்பல ஆர்ணவும்”


என்பது மகளிர் துணங்கைக் கூத்தாடிய செய்தியாகும். மகளிரது தலையில் ஆம்பல் பூக்கள் சூடப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும். அவர்கள் ஆடியபோது அப் பூக்கள் உதிர்ந்த வண்ணம் பற்றி பதிற்றுப்பத்தில் கூறப்பட்டிருக்கின்றது. இதேவேளை போரில் வெற்றிபெற்ற மன்னன் பெண்களுடன் சேர்ந்து துணங்கை ஆடிய செய்தியும் உண்டு. பெண்கள் இருவர் ஆடும்போது விரல்களாலே அடித்தடித்துக் கூத்தாடும் ஒருவகை மகிழ்ச்சிக் கூத்தென புலியூர் தேசிகன் கருத்துரை கூறியுள்ளார்.


“சுடரும் பண்பின் திருநாறு விழக்கத்து


மாளாஇம்மிழ் துணங்கைக்கு தழுவ புனையாக


சிலை புகழ் ஏற்றின் தலைக்கை தந்து” (புறத். 31)


இப்பாடல் வரிகள் துணங்கைக் கூத்துப் பற்றிக் கூறும்போது பசுமை படர்ந்த சேரிப்பகுதியில் மக்கள் துணங்கை ஆடுகின்றனர் என்றும் வீரம் மிக்க இளைஞர்கள் தாம் விரும்பிய பெண்களுடன் துணங்கையாடினர் என்றும் அகத்திணையுடன் இணைந்ததாகத் துணைங்கைக் கூத்துப் பற்றிக் கூறியிருப்பதைக் காணலாம். மதுரைக் காஞ்சி (159-163) வரையான பாடல்கள் பேய்மகளிர் என்ற தலைப்பில் பேய்களோடும் துணங்கைக் கூத்துப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இவற்றைவிட துணங்கைக் கூத்து எனும் பெயரில் சங்க இலக்கியங்கள் பலவித ஆடல்களாகக் கூறுகின்றன. பெண்களின் ஆடல் என்றும் (பதிற்று 12) போர்க்கள ஆடல் என்றும் (பதிற் 45) பரத்தையருடன் அரசரின் ஆடல் என்றும் (பதிற் 52) தலைவன் பரத்தையருடன் ஆடல் என்றும் (அகம் 33) ஆண்களும் பெண்களும் விழாவில் ஆடுதல் என்றும் (குற. 364) பேய்களின் ஆடுதல் (மலைபடுகடம் -26) என்றும் பலவிதங்களில் கூறியிருக்கின்றனர்.இவற்றை அடிப்படையாகக் கொண்டு போர்க்களத்தில் கொற்றவைகளும் பேய்களும் ஆடுவது, விழாக்காலத்தில் ஆண் பெண் இருபாலாரும் ஆடுவது என இரு பிரிவுகளாக பிரித்துநோக்கலாம். இவ்வாடலில் பிரதான அம்சமாக ‘தலைக்கை தருதல்’ என்பது இடம்பெறுகின்றது.


 


அடுத்து வேலன் வெறியாடல் பற்றி நோக்குமிடத்துச் சங்ககாலத்தில் பரவியிருந்த ஆடற்கலை மத நம்பிக்கையில் பிறந்தசக்தியில் ஆதிக்கம் பெற்றிருக்கின்றது என்று சங்க கால இலக்கியங்கள் கூறுகின்றன. இவ்வாறு சங்க இலக்கியங்களில் அதிகம் இடம்பெற்ற ஆடல்களுள் வெறியாடலும் ஒன்று. இவ்வாடலை சங்க இலக்கியங்கள் வெறி அயர்தல், வெறிசொரிதல், வெறி உறுதல், காதற் கூத்து என்ற பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இவ்வாடலின் பெயருக்கேற்ப இது வெறி மிகுந்த ஒரு ஆடலாகும். இவ்வாடலை ஆடுபவர் தானாக ஆடுவதில்லை கடவுள் அருள் ஆடுபவர் மீது இறங்குவதால் ஏற்படுகின்ற உத்வேகத்தால் வெறிமிகுந்து ஆடுவதாகக் கூறுவர். சங்க காலத்தில் அகத்திணையின் கண் நிகழ்த்தப்பட்ட வெறியாடலைப்பற்றி தொல்காப்பியம் செப்புகின்றது.


“வெறியாடிய சிறப்பின் செவ்வாய் வேலன்


வெறியாட்டு அயர்ந்த கந்தனும் உறுபகை”


கடவுள் நம்பிக்கைக்கும் இளம் பெண்ணுக்குமிடையே இடம்பெறுகின்ற ஒரு சடங்கு ஆடலாக இவ் வேலன் வெறியாடல் விளங்குகின்றது. மேலும்


“படிநர் தேய்ந்த பல புகழ் தடக்கை


நெடுழுவாட்டப் போணங் தணிகுவ்ள அவள் என


முதுவாய் பெண்டிர் அதுவாய் கூற..


உவந்தமை கண்டே”


இவ்வடிகளில் காதல் நோயால் உடல் மெலிந்த பெண்ணிற்கு தெய்வக் குற்றம் நிகழ்ந்ததென்ற முதிர் பெண்டிர் கூற வெறியாடலுக்குரிய களம் அமைக்கப்பட்ட முருகனை நினைத்துப் பாடியாடிக்கொண்டிருக்கின்றபோது அப்பெண்ணினுடைய தலைவன் அவர்களை அறியாமல் தலைவியிடம் வந்து அவளை அணைத்து காதல் நோய்க்கு மருந்திடச் சென்றான். இதனால் அப்பெண்ணும் காதல் நோயிலிருந்து தெளிவடைகிறாள். இதனை அவதானித்த உற்றார் தெய்வக் குற்றம் நீங்கியதாகக் கருதுகின்றனர். இதேவேளை பெண்கள் முருகனை நினைத்து வெறியாட்டத்தை ஆடியதைப் பட்டினத்துப்பாலை பின்வருமாறு கூறுகிறது.


“செறிதெடி முன்னக கூப்பி செவ்வேள்


வேறி ஆடு மகளிர்……”


இத்தகைய வெறியாடல் நிகழும்போது வெறியாட்டுப்பறையும் தொண்டகப்பறையும் இசை வழங்கியதாக தொல்காப்பியம் கூறுகிறது.இவ்வாறாக குரவைக்கூத்து துணங்கைக் கூத்து, வேலன் வெறியாடல் போன்ற ஆடல் வடிவங்கள் சங்ககால இலக்கியங்களில் சிறப்புற்று இருப்பதை அறியக்கூடியதாக உள்ளது.குரவை, துணங்கை, வெறியாடல் போன்ற, மக்கள் வழக்குகளைத் தழுவிய ஆட்டங்கள் மட்டுமன்றி தெய்வங்கள் ஆடிய நடனங்கள் என சில நடனங்களைச் சங்க இலக்கியங்கள் எடுத்து மொழிகின்றன. அவை திருமால் ஆடிய குடக்கூத்தினையும், அல்லியக் கூத்தினையும், சிவபெருமான் ஆடிய கொடுகொட்டி, பாண்டரங்கம், கபாலம், ஊழிக் கூத்துக்களைச் சிறப்பிக்கின்றது. சங்க இலக்கியம், தமிழர் மட்டுமன்றி, தமிழகம் வந்தணைந்த ஆரிய மக்களும் கூத்தாடினர் என்பதை சங்க இலக்கியங்களில் ஒருசில பாடல்கள் சுட்டுகின்றன. கூத்துக்களை ஆடுகின்ற போது செய்துகொள்ளப்பட வேண்டிய ஒப்பனைகளையும் சங்க இலக்கியங்கள் காட்டியுள்ளன.அதேபோல ஆடலுக்குப் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகள் பற்றிய செய்திகளை நோக்கும்போது சங்ககால இசை நிகழ்வு, நாட்டிய நிகழ்வுகளில் குழல், யாழ், மிருதங்கம் போன்றன பயன்படுத்தப்பட்டமையை அறியலாம். மிருதங்கம் - மத்தளம் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டாலும் மாச்சனை பயன்படுத்தப்பட்ட செய்தியைக் கொண்டு மிருதங்கத்தின் பயன்பாடே என்ற தெளிவைப் பெறலாம்.


 


Comments

Popular posts from this blog

யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்)

முகநூல் லிங் #ஜோதிரிவ்யூ எழுத்தாளர் : பாரதிப்பிரியன் படைப்பு : யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்) இதுவொரு வரலாற்று நாவல். அதனால் ஆசையுடன் படிக்க துவங்கிவிட்டேன். ஒவ்வொரு காட்சிகளும், நகர்வுகளும், வாக்கிய உச்சரிப்புகளும், வருணனைகளும், கதாப்பாத்திரத்தின் பெயர்களும், போர் முறை, வியூகம், சதி வேலைகள் ஏமாற்று அப்பப்பா! இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் எழுத்தாளரின் திறமையை. இந்நாவல் வாசிப்பின் மூலம், நிறைய தகவல்கள், சாம்ராஜ்ஜியங்கள்,  மன்னரின் வாழ்க்கை, பேராசை பட்டு துயர் உறுபவர்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். அதற்கும், இக்கதையை எவ்வித பிசிறின்றி வடிவமைத்தமைக்கும் மனமார்ந்த பாராட்டுகள்👏👏👏 யாழினி : பல்லவ படை வீரன் கந்தமாறன் தலைமையில் நடைபெற்ற போரில், தோல்வியை தழுவிய களப்பிரார்கள் சேர தேசத்திற்குள் புகுந்து அங்கு பெரும் சேதத்தை உருவாக்கியதுடன், அரசர், ராணி, அவரது மூன்று வாரிசுகளை கொன்றுவிடுகிறார்கள். அத்துடன் அங்கேயே தங்கி அதிகாரத்தை நிலைநாட்டுகிறார்கள்.  சேரத்தை ஆள வேண்டும் என்ற ஆசையில் களப்பிரார்களின் அரசனின் மனதில் ஆசையை வளர்த்து, பல பெண்களின் வாழ்க்கையை அழித்து, த...

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு: குமரி மாவட்டத்தின் மனித நாகரிகமானது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உத்தேசமாக கி.மு.1500 முதல் 1000 – மாவது ஆண்டுகளுக்கு இடையிலான கற்கால கோடரி கருவியின் கண்டுபிடிப்பிலிருந்து குமரி மாவட்டத்தின் வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரம் தெளிவாகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூா் கிராமத்தின் அருகே கையால் செய்யப்பட்ட சொரசொரப்பான மண்ஜாடிகள் மற்றும் பழம்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனுடைய வடிவம், ஆடை, அலங்காரங்கள் பெரும்பாலும் கற்காலம் அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலத்தினை பிரதிபலிக்கிறது. இப்பகுதியில் கிடைக்கப்பெற்ற புராணங்கள் மற்றும் கலாச்சாரப் பதிவுகளிலிருந்து மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகத்திற்கு இணையான ஒரு பெரிய நகரம் கற்காலத்தில் தழைத்தோங்கியது என்று சந்தேகத்திற்கு இடமின்றி நம்பப்படுகிறது. கடலடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழம்பொருட்கள் மூலமாக இந்த நாகரிகமானது கடல் அரிப்பின் மூலமாக முற்றிலுமாக அழிந்துள்ளது என நம்பப்படுகிறது. தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிய தகவல்கள் முதன் முதலில் பொனிஷியா்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 276-ல்...

மதுபோதையும் பிரச்சனையும் அறிகுறிகளும்

மது போதை: பிரச்சினையும் அறிகுறிகளும் ஆசாத் : மதுப்பழக்கம், உடலின் நலத்தைப் பாதித்து, குடும்பத்தின் நிம்மதியைக் களவாடி, வாழ்வின் இன்பத்தை இழக்கச் செய்கிறது. மதுப்பழக்கத்தால், குடிப்பவர் மட்டுமல்லாமல்; ஒட்டுமொத்தச் சமூகமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இது தனிநபரின் பொருளாதாரத்தைப் பாதித்து நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே முறிக்கிறது. இன்பத்தைத் தேடி மதுவைப் பலர் நாடுகின்றனர். ஆனால், அதுவே பின்னாளில் தீவிரப் பிரச்சினையாக மாறும் என்பதை அவர்கள் ஆரம்பத்தில் உணர்வதில்லை. மது ஒரு அமைதியூட்டி, என்று நம்புவது அறியாமை. அது அடிமைப்படுத்தும் தன்மையுடையது மதுப்பழக்கத்தால் மனநோய் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் உண்டு. மதுப்பழக்கத்தின் தீங்குகள் குறித்தும் அதிலிருந்து மீளும் வழிமுறைகள் குறித்தும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மனநலத் துறையினர் சார்பில் வெளியிட்டுள்ள தொகுப்பு இது: மதுவால் உண்டாகும் உடல் நலக்கோளாறுகள்  *  அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் வயிற்றுவலி, ரத்தவாந்தி, மயக்கநிலை போன்றவை ஏற்படலாம். மரணமும் ஏற்படச் சாத்தியம் உண்டு. *  பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதி...