| குளச்சல் போர் | |
|---|---|
| திருவிதாங்கூர்-டச்சு போர் பகுதி | |
மார்த்தாண்ட வர்மாவிடம் சரணடையும் டச்சுப்படை வீரர்கள் | |
போருக்கான காரணம்
மார்த்தாண்ட வர்மா தனது நாட்டை விரிவாக்கம் செய்வதற்காகப் பல குறுநில அரசுகளை வென்றெடுக்க விரும்பினார். டச்சு நிறுவனத்துடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த தேசிங்க நாடு நெடுமங்காடு அரசுகள் மீது மார்த்தாண்ட வர்மா போர் தொடுத்ததால் டச்சுக்காரர்களின் வணிகம் கடுமையாகப் பாதிப்புக்குள்ளானது. எனவே 1739 முதல் தேசிங்கநாடு பகுதியில் டச்சுப் படையினர் திருவாங்கூர் படையுடன் மோதி வந்தனர்.
1740 ஆகஸ்டு மாதத்தில் மார்த்தாண்ட வர்மா குளச்சல் பகுதியில் வணிகம் செய்வதற்குப் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருந்தார். தென் பகுதியில் தனக்குப் போட்டியாக பிரெஞ்சுக்காரர்கள் வருவதை விரும்பாத டச்சுக்காரர்கள் உடனடியாக குளச்சல் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர்.
முதல் தாக்குதல்
1740 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று குளச்சல் கடல் பகுதியை முற்றுகையிட்ட டச்சுக் கப்பல்களிலிருந்து கடற்கரையை நோக்கிக் கடுமையான பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இரண்டு நாள்களுக்குத் தாக்குதல் நீடித்தது. உள்ளூர் மக்கள் ஊரைவிட்டு வெளியேறினர். வட கிழக்குப் பருவக்காற்று கடுமையாக வீசிக் கொண்டிருந்ததால் டச்சுப் படையினரால் கப்பலிலிருந்து கரையிறங்கி ஊருக்குள் வர இயலவில்லை. குளச்சலில் முகாமிட்டவாறு கோட்டாறு மற்றும் இரணியலில் செயல்பட்டு வந்த நெசவுக் கூடங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் அமைந்திருந்த மிளகுத் தோட்டங்கள் அனைத்தையும் அழித்துத் திருவிதாங்கூருக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதே டச்சு நிறுவனத்தின் நோக்கமாக இருந்தது.
குளச்சல் கோட்டை
டச்சுப் படையின் கொச்சி தலைமைத் தளபதி ஸ்டைன் வான் கொலேனேஸ் தலைமையில் கொல்லத்திலிருந்த டச்சுக் கப்பல்கள் பிப்ரவரி மாதம் குளச்சலை வந்தடைந்தன. 1741 பிப்ரவரி 19 அன்று அதிகாலை குளச்சலில் கரையிறங்கிய டச்சுப் படையினருக்கும் திருவாங்கூர் படையினருக்குமிடையே நடைபெற்ற மோதலில் டச்சுத் தரப்பில் 22 பேர் கொல்லப்பட்டனர். பெருமளவுக்கு உயிரிழப்பைச் சந்தித்த திருவாங்கூர் படை குளச்சலிலிருந்து பின்வாங்கியது. குளச்சலில் முகாமிட்ட டச்சுப் படையினர் கடற்கரையில் செங்கல் மற்றும் களிமண்ணைக் கொண்டு கோட்டை ஒன்றைக் கட்டி எழுப்பினர்.
1741 மார்ச் 26 ஆம் தேதி அன்று டச்சுப் படை கடல் மார்க்கமாகச் சென்று தேங்காய்ப்பட்டணத்தின் மீது கடுமையான குண்டு வீச்சினை நடத்தியது. அங்கே கரையிறங்கிய டச்சுப் படை நெசவுக் கூடங்களையும், வீடுகளையும் தீக்கிரையாக்கியது. டச்சுப் படையினரிடம் பிடிபட்ட உள்ளூர் இளைஞர்கள் டச்சுக் கப்பல்களில் அடிமைகளாக விற்கப்பட்டனர்.
குளச்சலில் டச்சுப் படையினர் தங்களை வலுவாக நிலைநிறுத்திக்கொண்டதால், ஸ்டைன் வான் கொலேனேஸ் மற்றும் கேப்டன் ஹாக்கர்ட் ஆகியோரது தலைமையிலான இரண்டு படைப் பிரிவினர் குளச்சலிலிருந்து திரும்பிச் சென்றுவிட்டனர். யோகான் கிறிஸ்டியான் ரிஜிட்டல் தலைமையிலான 300 வீரர்களை உள்ளடக்கிய படைப்பிரிவினர் மட்டுமே குளச்சலில் எஞ்சியிருந்தனர்.
திருவிதாங்கூரின் தாக்குதல்
திருவிதாங்கூரின் இரண்டாவது இளவரசர் ராமவர்மா தலைமையிலான உள்நாட்டுப் படையினர் போரின் துவக்கத்தில் எதிர்த் தாக்குதலை நடத்தி வந்தனர். டச்சுப் படையை எதிர்கொள்ள டச்சு மற்றும் ஆங்கிலேயப் படையிலிருந்து விலகி வந்த ஐரோப்பிய வீரர்கள் பலரை மார்த்தாண்டவர்மா தனது படையில் இணைத்துக்கொண்டார். கார்ல் அகஸ்ட் டியுவன்சாட் என்ற ஜெர்மானியர் தலைமையிலான 24 ஐரோப்பிய வீரர்கள் உள்ளூர் படையினருக்குப் பயிற்சி அளித்ததுடன், குளச்சல் முற்றுகையை வழிநடத்தியும் வந்தனர். டச்சுக்காரர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்காக ஆங்கிலேயர்கள் மார்த்தாண்ட வர்மாவுக்கு மூன்று கப்பல்களில் வெடி மருந்து, துப்பாக்கி, பீரங்கி போன்ற ஆயுதங்களை அனுப்பி வைத்தனர்.
சூன் மாதத் துவக்கத்திலிருந்து திருவாங்கூர் படை தீவிரமான தாக்குதலைத் தொடுத்துக் குளச்சலை நோக்கி முன்னேறிச் சென்றது. கண்காணிப்புக் கோபுரங்கள் மற்றும் பீரங்கிகளைத் தாங்குவதற்கான கொத்தளங்கள் அமைத்தும், கடற்கரையில் கண்ணி வெடிகளைப் புதைத்தும் திருவாங்கூர் முற்றிலும் ஐரோப்பியப் பாணியிலேயே தாக்குதலை நடத்திவந்தது.
டச்சுப்படையின் தோல்வி
திருவாங்கூர் படை குளச்சல் கோட்டையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த சமயத்தில் டச்சுப் படையினர் கூடுதல் படை உதவி கேட்டு பிற டச்சு முகாம்களுக்குத் தூதுவர்களை அனுப்பியிருந்தனர். கன்னியாகுமரியிலிருந்த ஹாக்கர்ட் தலைமையிலான படைப் பிரிவினரால் குளச்சலுக்கு வந்துசேர இயலவில்லை. 1741 ஆகஸ்ட் 2 அன்று தளபதி யோகான் கிறிஸ்டியான் ரிஜிட்டல் தலையில் குண்டடிபட்டு இறந்து போனார். அதனைத் தொடர்ந்து 31 டச்சுப் படை வீரர்கள் சரணடைந்தனர். ஆனாலும் துணைத் தளபதிகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வந்தனர்.
1741 ஆகஸ்டு 9 அன்று கோட்டைக்குள் இருந்த வெடிமருந்து கிடங்கு வெடித்துச் சிதறியதால் எஞ்சியிருந்த அனைத்து வீரர்களும் சரணடைய முடிவு செய்தனர். 1741 ஆகஸ்ட் 12 அன்று நூற்றுக்கும் மேற்பட்ட டச்சுப் படை வீரர்கள் மார்த்தாண்ட வர்மாவின் முன்பாக சரணடைந்தனர். அதன் பின்னர் குளச்சல் கோட்டை அழிக்கப்பட்டது. குளச்சல் தோல்விக்கு கேப்டன் ஹாக்கர்ட்டின் பொறுப்பின்மையே காரணம் என்று முடிவு செய்த டச்சுக் கம்பெனியின் கொச்சி தலைமையகம் ஹாக்கர்ட்டை இந்தோனேசியாவிற்கு நாடு கடத்தி அவரை தனிமைச் சிறையில் அடைத்து வைத்தது.
போரின் விளைவுகள்
குளச்சல் போரில் ஏற்பட்ட தோல்வியால் கேரள பகுதிகளில் டச்சுக்காரர்களின் ஆதிக்கம் சரியத் தொடங்கியது. திருவிதான்கூருடன் சமாதானமாக போக விரும்பிய டச்சுக் கம்பெனி 1743 மற்றும் 1753 ஆம் ஆண்டுகளில் திருவாங்கூர் மன்னருடன் வணிக உடன்படிக்கைகளைச் செய்துகொண்டது. குளச்சல் போரின் வெற்றியால் மார்த்தாண்ட வர்மாவின் செல்வாக்கு அதிகரித்ததுடன் தென் கேரளத்தில் அவர் வலிமையான மன்னராக உருவெடுப்பதற்கும் இந்த வெற்றி வழிவகுத்தது.
குளச்சல் போரின்போது திருவாங்கூர் படையில் சேர்க்கப்பட்ட ஐரோப்பிய வீரர்களின் திறமையால் திருவாங்கூர் படை நவீனப்படுத்தப்பட்டு, பல குறுநில அரசுகளும் வீழ்த்தப்பட்டன. கன்னியாகுமரி டச்சு முகாமிலிருந்து விலகி திருவாங்கூர் படையில் இணைந்துகொண்ட யுஸ்டாச் டி லெனாய் என்ற ஐரோப்பிய வீரர் மார்த்தாண்ட வர்மாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி, திருவாங்கூரின் படைத் தளபதியாக பணியாற்றி பல போர் வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெற்றிச் சின்னம்
குளச்சல் போரின் வெற்றியை நினைவுகூரும் வண்ணம் குளச்சல் கடற்கரையில் திருவாங்கூர் அரசால் 1941 ஆம் ஆண்டு நினைவுத் தூண் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது. குளச்சல் போரின் இருநூறாவது ஆண்டு நினைவைக் கொண்டாடும் விதமாக இந்தத் தூண் எழுப்பப்பட்டிருக்கிறது. 1741 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் தேதி போர் முடிவடைந்ததாக இந்த தூணில் கல்வெட்டு பதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தேதியானது 1906ஆம் ஆண்டு வெளிவந்த வி. நாகம் ஐயாவின் ‘திருவாங்கூர் ஸ்டேட் மானுவல்’ புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் தேதியாகும். ஆனால் திருவான்கூரின் பிற வரலாற்றாசிரியர்களான சங்குண்ணி மேனன் மற்றும் டி.கே. வேலுபிள்ளை ஆகியோர் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தான் போர் முடிவடைந்ததாக குறிப்பிடுகின்றனர். டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களில் ஆகத்து 12 ஆம் தேதி அன்றே போர் முடிவடைந்ததாக கூறப்பட்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
*****
இன்றைக்கு 250 ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்தின் வரலாறு ஒரு மறத்தமிழனின் வாளால் மாற்றி எழுதப்பட்ட சரித்திரத்தை அறிந்தவர்களில் இங்கு எத்தனைபேர் இருப்பார்கள்?.
துண்டு துண்டாக உடைந்து சிதறிக்கிடந்த இந்த கடவுளின் தேசம், ஒரு மாபெரும் தானைத் தலைவனால் திருவாங்கூர்தேசம் என ஒட்டுமொத்த கேரளமும் அழைக்கப்படும் நிலையில் உயர்ந்ததற்கு யார் காரணம்?
வேணாடு {வேள்+நாடு} எனும் ஒரு சிற்றரசைப் பரந்து விரிந்த பேரரசாக மாற்றிக் காட்டியவன் பாண்டியர் பரம்பரையில் 'பானு'வாய்த் தோன்றிய ஒரு பைந்தமிழ் மறவன்.
அவன் பெயர் "அழகு சிதம்பர திருச்சிற்றம்பலப் பொன்முடி தரித்த பொன்னம்பாண்டியத் தேவன்"
தென்காசி ஆண்ட பாண்டியகுலமணிகளில், "பொன்னின் பெருமாள் பாண்டியன்" என்பது பராக்கிரம பாண்டியனின் {கி.பி.1422}மற்றொரு பெயராகும். இதை தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயக் கல்வெட்டு கீழ்கண்டவாறு தெரிவிக்கிறது..
” ஸூபமஸ்து ஸகயர்ய மெதகு ஸதகம் ஸமஸ்த
புரமௌலிபியஹ ஸாஸநம் விஸ்வநாதஸ்ய ஸம்
போர்ஜ ஜயதி ஸாஸ்வதம் ஸகாப்தம் ஆயிரத்து முன்
னூற்று எண்பத்து நாலின் மேற் செல்லா நின்ற
ஸ்வஸ்தி ஶ்ரீ கோஜடிலவர்ம்மராந த்ரிபுவனச்சக்ரவ
த்திகள் பெருமாள் அரிகேஸரி தேவர் என்று திரு
நாமம் உடைய பொன்னின் பெருமாள்
பராக்ரம பாண்ட்ய தேவர் இருந்தருளிய இடத்
துக்கு யாண்டு முப்பத்தி ஒன்றாவதின் எதிர் ஒன்
பதாவது மிதுந ஞாயற்று இருபத்தெட்டாந் திய
தியும் அபர பக்ஷத்து த்ரயொதிசியும் ஸுக்ர வாரமும்
பெற்று நம்முடைய் இருந்தருளிய இடத்தின் திருநாள்
ஆன ம்ருக ஸீர்ஸத்து நாள் ஜநமும் பதினெட்டு நாட்டு வெ
ள்ளாளம் இரண்டு பத்திரிவறியும் மற்றும் அஞ்சுவரை
ப்படை பரிகாரமுங் கூடிக் கழித்த கார்யமாவது.
உடையார்
விஸ்வநாதந் உத்தர காசியிலெழுந்தருளி இருந்
த சிவாலயம் ஜீர்ண்ணமாகையாலே நமக்கு தக்ஷி
ண காஸியாக ஆலையஞ் செய்து தர வேணும்
என்று எங்களுடைய காத்தர் பெருமான் அரிகேஸரி
தேவர் என்று திருநாமமுடைய பொன்னின் பெரு
மாள் பராக்ரம பாண்ட்ய தேவர் (இருந்தருளி) இட
த்தின் உடனே ஸூபநத்திலே திருவுள்ளம் பற்றி ..
.. னாலையாலே முன்னாள் ஸகாப்தம் ஆயிரத்து முன்
னூற்று அறுபத்தெட்டின் மேல் ரிஷப ஞாயற்று
பத்தாந் தியதியு பூர்வ்வ பக்ஷத்து தஸமியும் ஸுக்ர
வாரமும் பெற்ற உத்திரத்து நாள் மீனமு ஹூத்ந
க கர்ஷணையு பெறு தக்ஷிண காஸியா.. திரு
ப்படை வீடு மண்டு (ஆதி) உடையார்
விஸ்வநாதனையும் நாச்சியார் உலகமுழுது
முடைய நாச்சியாரையும் பிரதிஷித்து "… - என இந்த சாசனம் "எங்களின் காத்தர் பெருமானாக விளங்கக்கூடிய அரிகேசரி தேவர் எனும் திருநாமம் உடைய 'பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டிய தேவர்"' என பாண்டியன் பெயர் பெற்றிருந்ததை விளக்குகிறது. இப் பராக்கிரம பாண்டியனின் பெயரால் பொன்னின் பாண்டியத் தேவன்" எனப் பெயர் கொண்டுப் பின்னாளில் "பொன்னம் பாண்டியத் தேவன்" என வழக்கு மொழிச்சொல்லால் வழங்கப்பெற்றவனே மேற்கண்ட திருவாங்கூர்ப் படைத்தலைவன் பொன்பாண்டியத்தேவன் என உறுதி செய்யலாம்.
இந்த மாவீரனின் போர்த் திறனை இவ்வுலகம் அறியும் வாய்ப்பை காயாங்குளம்- குளச்சல் என இரண்டு போர்க் களங்கள் ஏற்படுத்திக் கொடுத்தன.
வேணாட்டு மன்னர் மார்த்தாண்ட வர்மா {கி.பி.1729} ஆட்சிக்கு வந்த நேரத்தில், கேரள நாடு துண்டு துண்டாகச் சிதறிக்கிடந்து ஆங்காங்கே குற்றரசுகளால் ஆளப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த அரசுகளிடையே ஓயாத பகை எப்போதும் இருந்ததன் விளைவாக நாட்டில் எப்போதும் போர்மேகம் சூழ்ந்திருந்தது. பற்றாக்குறைக்கு உள்நாட்டுக் கலகங்கள் வேறு தலை தூக்கியிருந்தன. எங்கும் குழப்பமும் அமைதியற்ற சூழலும் உருவாகியிருந்தது. இந்த நிலைக்கு ஓர் முடிவைக் கட்ட மார்த்தாண்ட வர்மா முனைந்தார். இவரும் சாதாரணமாக ஆட்சிக் கட்டிலில் ஏறியவரல்ல!, "எட்டுவீட்டில் பிள்ளைகள்" என்றழைக்கப்பட்ட முன்னாள் மன்னரின் உறவினர்களை சிங்கம்பட்டிச் சமஸ்தானத்துச் சிங்கக்குட்டியின் {இளவரசரின்} உதவியோடு ஒழித்துக் கட்டியே ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தார். இவர் அமர்ந்த நேரம் கருவூலம் காலியாக இருந்தது. படையும் பலமிழந்து வலிவுகுன்றி இருந்தது. சுற்றிலும் பகைவர்கள் சீற்றமுடன் இருந்தனர். இதையெல்லாம் சீரமைக்க அவர் விரும்பினார். தனக்கு நம்பிக்கையான நபர்களை அதிகாரத்தில் அமர்த்தினார். திருக்குறுங்குடி காவல் தலைவர்கள் பண்டைய பாண்டிய அரசர்கள் வழியினர். அவர்களில் இருந்து ஒரு வம்ச விளக்கு வாளேந்தி ஒளிவிட்டுக் கொண்டிருந்தது. அந்த விளக்கை மார்த்தாண்ட வர்மன் எடுத்து வந்து திருவிதாங்கூருக்குத் தீபம் ஏற்றினான். அது அவனின் இதமான ஆலய தீபமாகவும், அவனை எதிர்க்கும் பகைவர்களுக்கு ஊழிப்பெருந்தீயாகவும் காத்து நின்றது.
டச்சுக்கம்பெனிப் படைகள்- காயங்குளம் அரசு- கொல்லம் அரசு- ஆற்றிங்கல் அரசு- கொச்சி அரசு - என எல்லா அரசுகளும் அதன் படைகளும் பொன்னம்பாண்டியத்தேவனின் ஆயிரம் குதிரைப்படை மறவர்களின் வாள் முனையில் வீழ்ந்தன.
இதன் விளைவாக அகன்று விரிந்த திருவிதாங்கூர் அரசு உருவானது.
குளச்சலில் ஒரு குடைச்சலைக் கொடுக்க டச்சுக்காரர்கள் - காயங்குளம் கூட்டணியில் சில குழுக்கள் ஒன்றிணைந்தன. பத்மநாபபுரம் கோட்டையை டச்சுக்காரர்கள் தகர்க்க முயன்றபோது டச்சுப்படை நடுவில் புகுந்து , தத்தம் வாளால் வகுந்து போட்டது மறவர் படை. டச்சுப்படை நாலாபக்கமும் சிதறி ஓடியது. கை-கால் இழந்து , குற்றுயிரும் குலையுயிறுமாகக் கிடந்த டச்சு வீரர்களை அப்படியே போட்டுவிட்டு தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் எனப் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடினார்கள் டச்சுப்படைத் தலைவர்கள். எஞ்சிய வீரர்கள் பாய்மரக் கப்பல்களில் ஒளிந்து கொண்டு, உள் நின்றனர். அவர்களையெல்லாம் கைது செய்து அரைநிர்வாண ஊர்வலமாக நடக்க வைத்து உதயகிரிக் கோட்டைக்குள் சிறை வைத்தது பொன்னம் பாண்டியத் தேவர் தலைமையிலான மறவர் படை. மண்டியிட்டு வணங்கிய டச்சுத் தலைவன் டி.லெனாயைத் தனது தோளுக்கு நேராக நிறுத்தி பகைவனையும் பண்புடன் நடத்திப் பார்போற்றும் புகழைப் பெற்றவன் இந்தத் தேவன். வணிகத்தை மட்டும் செய்!. வாளேந்த நினைத்தால் அதை எங்களுக்காக ஏந்து!. திருவாங்கூரின் படைகளுக்கு நீயே தலைமை ஏற்று நில்! என, டி.லெனாய் பணிக்கப்பட்டான். கேரளத்தின் மங்கையை மணந்து கொண்டு இம்மண்ணிலேயே அவன் வாழ்ந்து முடித்தான். இதனுடன் திருவாங்கூர் மீது படையெடுக்கும் எண்ணத்தை மார்த்தாண்ட வர்மனின் எதிரிகள் குழிதோண்டிப் புதைத்து விட்டனர்.
இந்தப் போரின் வெற்றிக்குக் காரணமாக இருந்த பொன்னின் பாண்டியனுக்கு ஏழு குளப்புரவுகள் வரியில்லாத தானமாக அளிக்கப்பட்டது. அரண்மனைச் சிறப்புகள் அளிக்கப்பட்டது. அரச குடும்பத்தவரோடு அரசகுடும்பாக விழாக்களில் பங்குபெறும் உரிமை வழங்கப்பட்டது.
மார்த்தாண்ட வர்மா காலத்திற்குப் பின்னரும் ராமவர்மாவுக்குத் துணையாக பாலமார்த்தாண்ட புரத்தில் வீற்றிருந்து விழிகாக்கும் இமை போல செயல்பட்டார் பொன்னம் பாண்டியன். இவர், ஆரல்வாய்மொழி- களக்காடு- கன்னியாகுமரி முதலிய கோட்டைகளை நிர்வகித்து நாஞ்சில் நாட்டின் தோவாளைப் பகுதியில் பாலமார்த்தாண்டபுரம் எனும் ஊரை உருவாக்கினார். தாழக்குடி- பார்வதிப் புதூரில் சொக்கர்-மீனாட்சிக்கும், பாலமார்த்தாண்டபுரத்தில் முப்பிடாரிக்கும் ஆலயம் சமைத்து வணங்கி, நிறைநாள் விழா எடுப்பித்து ஏழைகளுக்கு நெல்மணி வழங்கி, கடுக்கரையில் அயினூட்டுத் தம்பிரானாகவும் - பாலமார்த்தாண்ட புரத்தில் சாஸ்தாவாகவும் திருவாங்கூர் அரச குடும்பத்தாரால் கோயில் எழுப்பப்பட்டு கடவுளாகியவர் "அழகு சிதம்பர திருச்சிற்றம்பலப் பொன்முடி தரித்த பொன்னம்பாண்டியத் தேவர்".
இந்த மாபெரும் படைத்தலைவனைப் போற்றி வணங்கி AHRC யானது, இந்நாளில் அவரின் புனிதப் படத்தை வெளியிடும் பாக்கியத்தைப் பெறுகிறது.
Comments
Post a Comment