Skip to main content

இரணியல் அரண்மனை

இரணியல் அரண்மனை

இரணியல் அரண்மனை (Eraniel Palace) என்பது தமிழ்நாட்டின்கன்னியாகுமரி மாவட்டத்தின்தக்கலையில் இருந்து ஆறு கிலோ மீட்டரில் உள்ள சேரர் கால அரண்மனையாகும். இது ஏறக்குறைய 1300 ஆண்டுகள் பழமையான அரண்மனையாக கருதப்படுகிறது. இந்த அரண்மனையானது தென்னிந்தியாவில் அரசியல் மற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கிய இடமாக இருந்தது, ஏனென்றால் இரணியல் நகரம் பதினாறாம் நூற்றாண்டு வரை வேணாட்டின் பருவகால தலைநகரமாக இருந்தது. இந்த அரண்மனையில் கடைசியாக உதய மார்த்தாண்டவர்மா ஆட்சி செய்தார். அவரது காலத்துக்கு பிறகு தலைநகரானது பத்மநாபபுரத்துக்கு மாற்றப்பட்டது.


முகப்பு வாயிலில் இருந்து இரணியல் அரண்மனையின் தோற்றம்

கட்டடக்கலை

இந்த அரண்மனையானது ஆறு ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. இது பண்டையச் சேரர் கட்டிடக் கலையின் எச்சமாகும். இருப்பினும், பல தசாப்தங்களாக புறக்கணிப்பட்டதன் காரணமாக இது பெரும்பாலும் பாழடைந்த நிலையில் உள்ளது. தற்போது, அரண்மனையின் மூன்று பகுதிகள் மட்டும் அடையாளம் காணக்கூடிய பகுதிகளாக உள்ளன:


  • படிப்புரம் என்னும் முதன்மை அரண்மனைக்கு செல்லும் பெரிய நுழைவாயில் (இது தற்போது முழுமையாக அழிவில் உள்ளது)
  • குதிரை மாளிகை (குதிரைக் கொட்டடி), இது அரண்மனை வளாகத்தில் முக்கிய இடத்தில் உள்ளது. இது ஒரு சிறிய இரட்டை மாடி வீட்டின் முற்றத்தில் உள்ளது.
  • வசந்த மண்டபம் இதில் எட்டரை அடி நீளமும், நான்கரை அடி அகலமும் கொண்ட ஒரே பளிங்குக் கல்லால் ஆன படுக்கை இருக்கிறது.   இது அழகிய சிற்பங்கள் நிறைந்ததாக இருக்கிறது. இது அரண்மனையின் மேற்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இங்கு மன்னராக பட்டம் சூட்டிக் கொள்பவர்கள் பள்ளியறையில் சேரமானின் உடை வாளை வைத்து, ‘எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாட்டு மக்களை காப்பாற்றுவேன் என்று உறுதிமொழி எடுப்பார்கள். இதுக்கு ‘வாள் வச்ச சத்தியம்’ என்பது பெயர்.

இவ்வளவு பழமைவாய்ந்த இந்த அரண்மனை தற்போது பாழடைந்த நிலையில் உள்ளது. பல கட்டட அமைப்புகள் இடிபட்ட நிலையிலும், கூரை விழுந்த நிலையிலும் முழுமையாக அழியக்கூடிய நிலையில் உள்ளது. இதில் உள்ள பல கலைப்பொருட்கள் களவாடப்பட்டும் உள்ளது.

*****

இரணியல் அரண்மனை -மௌனசாட்சிகள்

மௌன சாட்சிகளில் ஒவ்வொரு வாரமும் பல கதைகள், போர்கள், அழிவுகள் ஆட்சி மாற்றங்கள், வீர சரித்திரங்களை தன்னுள் அடக்கி இன்றும் நம் தலைமுறையினருக்கு பலகதைகள் மௌனமாக கூறும் இடங்களை பார்த்து வருகிறோம். அதில் இந்தவாரம் உங்களை அழைத்து செல்வது முழுவதும் சிதிலமடைந்த இரணியல் அரண்மனைக்கு....,சரி வாங்க.., உள்ள போலாம்.., இது முழுக்க முழுக்க முழுக்க சிதிலமடைந்த கோட்டை. இங்க புதர்களும், பாம்பு புத்தும் இருக்கு. அதனால, ஒவ்வொரு அடியையும் (கை அடி இல்ல கால் அடி) கவனமா எடுத்து வச்சு வாங்க. அப்புறம் ராஜியக்காதான் கூட்டி போனாள்ன்னு என் மேல பழியை போடாதீங்கப்பு.

இந்த இடம் நாகர்கோயில்ல இருந்து தக்கலை செல்லும் வழியில் தக்கலையில் இருந்து நான்கு கிலோமீட்டர் முன்னாடியே இருக்கு இந்த இரணியல் அரண்மனை. இங்குள்ள மக்கள் இந்த அரண்மனையை சேரமான் பெருமாளின் கொட்டாரம் அப்படின்னு சொல்கிறாங்க .மேலும் மன்னர் பிரகலாதனின் தந்தை இரண்யகசிபு இந்தப்பகுதியை ஆட்சி செய்ததாவும் அதனால இந்த இடத்திற்கு இரணியல்ன்னு பேர் வந்திச்சுன்னும்  இந்தப்பகுதியிலுள்ள சிலர் சொல்கிறாங்க 

நாம நிக்குறது இப்ப அரண்மனையின் வாசலில் உள்ள படிக்கட்டுகளில்...,  ஒருகாலத்தில் ராஜாவும், படைகளும், ஆட்களும், அம்பாரிகளுமா அலங்கரித்த இந்த முற்றம் இப்ப ஆள் அரவம் இல்லாது வெறிச்சோடி கிடக்கு.  ஆனாலும் யாரோ இங்க தண்ணீர்தெளித்து கோலம் போட்டு பூக்களால் சில இடங்களில் அலங்கரிச்சிருக்காங்க.அது இந்த இடத்துல வாழ்ந்த ராஜாவுக்கும், மக்களுக்கும், அவர்களின் வீரத்துக்கும் இங்க இருக்குறவங்க செய்யும் மரியாதையோ என்னமோ!? ..  சரி வாங்க படிக்கட்டுகளில் ஏறி உள்ள போவோம் .

முழுசாவே இடிஞ்சு பாழடைஞ்சு போய் இருக்கு இந்த அரண்மனை. பார்த்து கவனமா வாங்க. இங்க நிறைய பாம்புகளும், குரங்குகளும் இருப்பதால கவனமா இருங்க.  இந்த அரண்மனை 12 ம் நூற்றாண்டில் சேரமன்னன் சேரமான் பெருமாளால் கட்டப்பட்டதா சொல்லப்படுது.

இங்க தனியா ஒரு முதல் நிலை மண்டபம் காணப்படுது. மொத்தமா மேற்கூரை விழுந்துட்ட நிலையில் மரச்சட்டங்கள் எல்லாம் அரித்து விழுந்து கிடக்கு.  கல் தூண்கள் தாங்கி இருந்த மண்டபங்கள் எல்லாம் மண்ணோடு மண்ணா காட்சியளித்து வெறும் தூண்கள் மட்டும் எலும்புகூடா பார்க்கவே நெஞ்சை பிசையுற மாதிரி காட்சியளிக்குது.  உள்ளே போக கொஞ்சம் பயமாதான் இருக்கு. இருந்தாலும் இந்த இடத்தை பத்தி வெளி உலகத்துக்கு சொல்லியே ஆகனும். அதனால, மனசுல தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு உள்ள போகலாம் வாங்க....,

காற்றும், வெளிச்சமும் வர்றதுக்காக கட்டிய சுவர்கள், இன்று காற்றும் வெளிச்சமும் தங்கு தடையின்றி வர்ற மாதிரி முழுசுமா அழிஞ்சு கிடக்கு. வழியெல்லாம் உத்தரத்திலுள்ள பலகைகளும், மேற்கூரையும் உடைந்து கிடக்க்கு. செடி, கொடிகளும் புதர்களாய் மண்டி கிடக்கு. பலகைலாம் கால்ல குத்திடாம பார்த்து வாங்க...,

செங்கல்லால கட்டப்பட்ட இக்கோட்டை சுவர்களெல்லாம் மழை, காற்று இவைகளால் அரித்து பாழடைந்து காணபடுது.  கலை வேலைப்பாடுடன் காற்று புகுந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட வட்டவடிவ பெரிய ஓட்டைகள் ஒவ்வொரு ரூம்லயும் இருந்திருக்கு, ஆனா, அதெல்லாம் கூட அரித்து மண்தூளா இருக்கு. இங்க தெரியும் குறுகலான நுழைவாயில் வழியா உள்ள போலாம் வாங்க
இதுதான் முதல்நிலை மண்டபம். நடுவுல் செடிகள் வளர்ந்து காணப்படும் இந்த இடத்துல சதுரவடிவில் பள்ளமான ஒரு பகுதி தெரியுது பாருங்க. அதில் கற்களான ஒரு தொட்டி மாதிரியான அமைப்பு ஒண்ணு இருக்கு. பழைய திருவிதாங்கூர் கட்டிட அமைப்புகளில் இதுலாம் கண்டிப்பா இருக்குமாம். இது,  சூரிய வெளிச்சத்திற்காக அமைக்கபட்ட பகுதின்னு நீங்க நினைக்கலாம். ஆனா அது ஒரு சுரங்க பாதையாம். இங்க இருந்த மகாராஜா அதுவழியா குதிரைரையில போய் பக்கத்தில இருக்கிற சிவன் கோவிலுக்கும், அங்க இருந்த திருவிதாங்கோடு என்னும் ஊரில் இருந்த கோட்டைக்கும் மகாராஜா குதிரையிலே போற அளவு அகலமானதாகவும், பெரியதாகவும் இருந்ததாம் . மேலும், இங்கே இருந்து பத்மநாபபுரம் அரண்மனைக்கும் செல்வதற்கு சுரங்கபாதை வழிகள் இருந்ததாம் .    
சொன்னா நம்புவீங்களான்னு தெரியல. மேல படத்துல இருக்கும் நீலக்கலர் பலூன் மாதிரியான புள்ளி எப்படி வந்துச்சுன்னு தெரியல. கேமராவுல படம் எடுக்கும்போது தெரியல. ஆனா, கம்ப்யூட்டர்ல போடும்போது இது இருக்கு. மத்த படத்துல இல்ல. இது எதனாலன்னும் தெரியல. ஒரு வேளை எல்லோரும் சொல்ற மாதிரி அங்க சுத்தும் ராஜாவின் ஆவியா இருக்குமோ!  

கல் தூண்கள் இருக்கிற பகுதியை கவனமா கடந்து வாங்க . மேற்கூரைகள் எல்லாம் இடிந்து விழும் நிலையில் இருக்கு. கீழ நிறைய பாம்பு புற்றுகள் இருக்கு. கவனமா ஒவ்வொரு அடியையும் எடுத்து வைங்க. இந்த மண்டபத்தின் அடுத்தநிலை அறைக்கு போலாம்.

கலைவேலைப்பாடுடைய கல் தூண்கள் கம்பீரமா காட்சியளித்தாலும் இதை தாண்டி செல்லமுடியாத அளவு புதர்கள்.  அதனால,  இருபத்தி மூன்றாம் புலிகேசி போல பின்னங்கால் பிடறில அடிக்க புற முதுகிட்டு ஓடிடலாம் வாங்க.

 இங்க ஒரு படிக்கட்டு இருக்கு. இது அரண்மனை கட்டிடத்தோடு இல்லாம தனியாக இருக்கு. இது நம்மை எங்க கூட்டிப் போகுதுன்னு பார்க்கலாம் வாங்க.

மேல படத்தில் இருப்பது சதுர வடிவிலான ஒரு பெரிய அறை. அதைச் சுற்றிலும் காற்று வருவதற்கு வசதியா மரத்தில் செய்யப்பட்ட அடைப்புச் சுவர்கள் எல்லாம் இடிந்து உள்ளே செல்லமுடியாத அளவு சிறைக்கூடம் போல தடுப்பு கம்பிகள் மாதிரி உத்திரதிலுள்ள கம்புகள் விழுந்து கிடக்கு.  இங்க கம்புகளின் இடையே ஒரு சமாதி போன்ற அமைப்பு தெரியுது வாங்க கிட்டக்க போய் பார்க்கலாம்.

உள்ள போக முடியாத அளவுக்கு கம்புகள் விழுந்து கிடக்கு.  சுத்தி போலாம்ன்னா புதர் மண்டிக் கிடக்கு.  அதனால, கம்புகளுக்கு இடைல பார்த்துக்கலாம் வாங்க.   நிறையப்பேர் இது சமாதின்னு தப்பா நினைச்சுக்குறாங்க.  ஆனா, இந்த அரண்மனையின் சிறப்பே ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிகப்பெரிய கட்டில்.  அழகா அறையின் நடுவுல உயர்ந்த பீடம், அதன் மேல் தான் கலை வேலைப்பாட்டுடன் இந்தக் கட்டில் காட்சியளிக்குது. பீடத்தில் நான்கு தூண்கள், தூண்களின் மேல் கூரை, கூரையைச் சுற்றிலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள், பூவேலைப்பாடுகள்ன்னு இன்னிக்கும் தெளிவாக் காட்சியளிக்குது ஆனா எல்லாம் கிட்டக்க போய் பார்க்க முடியாம தூரத்திலிருந்து பார்த்து ரசிக்கும்படியாகிடுச்சு. அந்த கட்டில் மேல சில பூக்களை தூவி இருக்காங்க. ஆனா, யாரு?எப்படி அங்கே போனாங்கன்னுதான் தெரியலை. மேலும் அரண்மனைக்கு வெளிய இருந்த ஒரு பெண்மணி சொன்ன தகவல் இந்த கட்டிலில்தான் மகாராஜாவும், மகாராணியும் படுத்து இருந்து உயிரோடு சொர்க்கம் சென்றனராம் .

இது மகாராஜா, மாகராணி குளிக்கும் இடமாம்.   இதைபத்தி சில சுவாரஸ்யமான தகவகல்கள் இங்க இருக்குறவங்க சொன்னாங்க. சுமார் ஒரு 50 வருடங்களுக்கு முன்பு நடந்தவிசயமாம் மகாராஜாவும் மகாராணியும் உயிரோடு சொர்க்கம் சென்றதால் ஒரு வயதான பெண்மணி தினமும் மகாராஜாவுக்கு வெத்திலை பாக்கு எல்லாம் சேர்த்து தட்டி இங்கே காணபடுகிற இந்த குளக்கரையில் ஒரு வெற்றிலையில் வைத்து விடுவாராம் அபொழுது மகராஜா அருபமாக வந்து அந்த மூதாட்டி தட்டி வைத்த வெற்றிலையை எடுத்து விட்டு வெறும் இலையின் கீழே ஒரு தங்க காசு வைத்து செல்வாராம் இது ஒவ்வருநாளும் வழக்கமாக இருந்து வந்து இருந்திருகிறது ஒருநாள் அந்த வயதான பெண்மணி அந்த தங்க காசையும்  வெற்றிலை விசயத்தையும் வெளியே சொல்லி தங்க காசையும் காண்பித்தாராம் அதன்பிறகு மகராஜா வெற்றிலையை எடுக்கவும் இல்லையாம் தங்ககாசையும் வைக்கவும் இல்லையாம்.

ஒருவழியா சரித்திர புகழ் வாய்ந்த அரண்மனையை அது இடிந்து கிடந்தாலும் அதை சுற்றி பார்த்து அதன் பெருமைகளையும் தெரிஞ்சுக்கிட்டோம். இந்த கோட்டைக்கு டாட்டா, பை பை சொல்லிட்டு இனி இங்க மலை மேல இருக்குற கோட்டைகளை பார்க்கலாம் வாங்க. இப்ப பத்பநாபபுரம் அரண்மனைக்கு தொடர்புள்ள இரண்டு கோட்டைகளை பத்தி பார்க்கலாம் முதலில் நாம செல்லபோறது மருந்துக்கோட்டை.

மருந்துக்கோட்டை பத்மனாபபுரத்தில் இருந்து திற்பரப்பு செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரத்துல 400 அடி உயரத்துல ஒரு குன்றின் மேல கட்டப்பட்டிருக்கு. கீழ இருந்து பார்க்க கோட்டை கம்பீரமா தெரியுது. வாங்க அங்க போறதுக்கு எதாவது வழி இருக்குதான்னு பர்ர்போம். இங்க இருக்குறவங்க கூட அங்க போறதில்லையாம்.  யாரும் வழிகாட்ட முன்வர மாட்டேங்குறாங்குளே! என்ன பண்ணலாம்!? நாமளே போலாம் வாங்க. போற வழிலாம் ரப்பர் தோட்டங்களும்,  மலைபாதைகளுமா செங்குத்தா இருக்கு.  கவனமா போலாம் வாங்க. அதுக்குமுன்னாடி இந்த கோட்டையைப் பத்தி இங்க இருப்பவங்க சொன்ன சில தகவல்களை உங்ககிட்ட பகிர்ந்துக்குறேன்.
தூரத்தில் மரங்களுக்கிடையில் தெரியுது பாருங்க அதுதான் இந்த  மருந்துக்கோட்டை.இது பத்மனாபபுரம் கோட்டை வடிவிலேயே  கட்டப்பட்டுள்ளதாம். கோட்டையின் மேற்பரப்பில் 5 கொத்தளங்களும், பெரிய கல்மண்டபம் ஒன்றும் இருக்குதாம்.  கோட்டையின் மேற்பரப்பு இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது.   உதயகிரி கோட்டையில் உருவாக்கப்பட்ட பீரங்கி படைத்தளத்திற்கு தேவையான வெடி மருந்துகளைத் தயாரிக்கவும்,  வெடி மருந்துகளை பதுக்கி வைக்கவும் இந்தக் கோட்டை   பயன்படுத்தப்பட்டதாம்.  நம்முடைய துரதிர்ஷ்டம் இதுக்குமேல பதையே இல்ல.  அதனால தூரத்துல இதை பார்த்துகோங்க ஏணி ஒரு சந்தர்ப்பத்தில உங்களை இங்கே கூட்டி செல்லமுடியுமானு பார்க்கிறேன் உதயகிரிக்கோட்டையில் இருந்து இந்த மருந்துக்கோட்டைக்கு சுரங்கப்பாதைகள் கூட இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்றாங்க .

மேலும் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு இந்த மருந்துக்கோட்டையில்தான் சிகிச்சை நடக்குமாம். சிகிச்சையில் இறந்து விட்ட வீரர்களை மைய கோட்டையில் கொண்டு சென்று போட்டுவிடுவார்களாம். அந்த உடல்கள் பறவைகளுக்கு உணவாகுமாம். அரச குடும்பத்தினர் இறந்தால் மட்டும் எரியூட்டுவார்களாம். அந்த சாம்பல் திட்டுகள் கூட இப்ப காணப்படுதாம். இந்த மருந்து கோட்டையை சுத்தி நிறைய காவல் தெய்வங்கள் மலையில் போகும் வழியில் பாதி பகுதியில் காணபடுது. அதனாலயே நமக்கு வழிக்காட்ட வர இங்கிருக்குறாவங்க பயப்படுறாங்க.

சரி இனி மையக்கோட்டையை பத்தி பாப்போம்.  அங்க போகும் பாதைகள்லாம் அழித்து ரப்பர் மரங்களை நட்டுவிட்டார்களாம். போவதற்கு வழியில்லை சிரமப்பட்டுதான் போகணும்ன்னு அங்க இருந்த பெரியவர் சொல்றார். அதோ தூரத்துல மலையின் மேல் தெரிகிறதே அதுதான் மைய கோட்டை.  நீங்களும் பார்த்துக்கோங்க. இனி கோட்டையின் அமைப்பை பத்தி பாப்போம் .

இது மருந்துக்கோட்டையிகிருந்து தக்கலை போகும் வழில அரை கிலோமீட்டர் தூரத்த்துல இருக்கு.   200 அடி உயரமுள்ள குன்றின் மேல் கட்டபட்டிருக்கு.   இதுவும் பத்மனாபபுரம் அரண்மனை வடிவிலேயே கட்டபட்டிருக்கு. சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்புள்ள இந்தக் கோட்டையை இப்பகுதி மக்கள் சவக்கோட்டைன்னு சொல்கிறாங்க.   அரச குடும்பத்தினர் இறந்தால் அவர்களை எரியூட்டுவதற்காக இந்தக்கோட்டையை கட்டினார்களாம் அதற்கு ஆதாரமாக கோட்டையின் உட்பகுதியில் சாம்பல் மேடுகள் இப்பவும் திட்டுத்திட்டா காணபடுதாம் .

அங்க போக வழிகள் சரிவர இல்லாததால உங்களை அங்கே கூட்டி போக முடியலை. யாராவது தைரியமா காவல் தெய்வ பயமில்லாம நமக்கு வழிக்காட்ட முன் வந்து, அங்கிருக்கும் காவல் தெய்வங்கள் அருள் புரிந்தால் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நாம் அங்க போகலாம்.

Comments

Popular posts from this blog

சங்ககால தமிழர் உணவு முறை :

சங்ககால தமிழர் உணவு மரபுகள்: உணவு என்பது மனித குலத்தின் அடிப்படை தேவைகளுள் ஒன்று என்பதைக் கடந்து, ஒரு சமூகத்தின் கலாச்சார, பொருளாதார, அரசியல், வாழ்வியல் மற்றும் புவியியல் அம்சங்களை பறைசாற்றும் ஒரு ஊடகமாக செய்யலாற்றுகிறது. அவ்வகையில் தமிழினத்தின் நெடிய வரலாற்றில் உணவு என்பது பல்வேறு மாற்றங்களுக்குள் உள்ளாகியிருக்கிறது. கல்வெட்டுக்கள், படிமங்கள், இடிபாடுகள் என்பனவே அதிகம் ஏற்றுக்கொள்ளப்படும் வரலாற்று ஆதாரங்களாக இருக்கும் போதிலும் ஒரு மக்கள் குழுவின் வாழ்வியல் அம்சங்களை நுணுகி அறிவதற்கு கலை, இலக்கிய மூலங்களே அதிகம் பயன்படுகின்றன. அந்த வகையில் தமிழ் வரலாற்றில் மிகப்பழைமையான இலக்கிய ஆதாரங்கள் நிரம்பியுள்ள சங்ககால மக்களின் உணவுப்பழக்கங்கள் அக்கால மக்களின் வாழ்வியலை புரிந்துகொள்ள இன்றியமையாதவையாக அமைகின்றன. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ் சமூகத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் எவ்வாறு உணவினோவடாக பிரதிபழித்தன என்பதை இங்கு காண்போம்.  இன்று மட்டுமல்ல அன்றும் நெல்லரிசியே தமிழகத்தின் பிரதான உணவாக அமைந்தது, செந்நெல், வெண்ணெல், புதுநெல் என அரிசி பலவாறு வகைப்பட...

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் (Kanyakumari district, மலையாளம்: കന്യാകുമാരി ജില്ല) தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இந்த மாவட்டம் 1,672 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகள் பேசப்படுகின்றன. மக்கள் தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் (ச.கிமீக்கு 1111-பேர்) வகிக்கிறது. பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை , கொல்லங்கோடு என 4 நகராட்சிகள் உள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி ஆகும். தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்குப்பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும், முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டமும், வடக்கு மற்றும் கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன. 2004 திசம்பர் 26 அன்று தென் ஆசியாவையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கட...

மதுபானம் உட்கொள்ளும் அளவு

மதுபானத்தை எந்த அளவு உட்கொள்ள வேண்டும்? 10 ஜனவரி 2016 மதுபானம் அருந்துவது தொடர்பிலான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பிரிட்டன் வெளியிட்டுள்ளது. பட மூலாதாரம், THINKSTOCK படக்குறிப்பு, மது அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என பிரிட்டிஷ் மருத்துவர்கள் அறிவுரை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் உடல் நலத்துக்கு ஏற்படும் தீங்குகளை குறைக்கும் நோக்கில், இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த அளவுக்கு மதுபானத்தை அருந்துவது, பெரிய அளவில் ஆபத்துக்களை ஏற்படுத்தாது என்பது குறித்து அந்த வழிகாட்டல் கையேடு கூறுகிறது. மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கு மதுபானத்தை அருந்துவது சிறந்தது என பிரிட்டிஷ் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம், THINKSTOCK படக்குறிப்பு, அதிக அளவுக்கு மது குடித்தால், அடுத்த நாள் பணிக்கு செல்லும்போது அதன் தாக்கம் தெரியும் எனவும் எச்சரிக்கை அதிகளவில் மதுபானத்தை அருந்துவதனால், புற்றுநோய்க்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். மதுபானத்தை தொடர்ச்சியாக அருந்துபவர்கள், வாரத்திற்கு 14 யூனிட்களுக்கு அதிக...